2016 இல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) முக்கிய அரசாங்கத் தகவல்களுக்கு பொதுவான அணுகலைச் இலகுபடுத்துவதன் மூலம் இதை மாற்ற முயற்சித்ததோடு அரசாங்கத்தை பொறுப்பேற்க பொதுமக்களுக்கு அதிகாரமும் அளித்தது. குறித்த சட்டத்தின் பிரிவு 9, ஐந்து பரந்த தொகுதிகளின் கீழ், ஒரு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு அவ் உட்கட்டமைப்பு திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சரை கட்டாயப்படுத்துகிறது. ஐக்கிய அமெரிக்க டொலர் 100,000 அதிகமான வெளிநாட்டுக் கருத்திட்டங்கள் மற்றும் ரூபா 500,000 க்கு மேற்பட்ட உள்நாட்டு கருத்திட்டங்களை, அவற்றை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்னதாக, குறித்த தகவல்கள் முன்கூட்டியே வெளியிடப்பட வேண்டும் என்பது RTI சட்டத்தின் முக்கிய தேவைப்பாடாகும்.
2022 ஆம் ஆண்டில், ரூபா 1.08 ட்ரில்லியன் மதிப்புள்ள 60 திட்டங்களின் 18% ஆன தகவல்கள் மட்டுமே ஒன்லைனில் முன்கூட்டியே வெளியிடப்பட்டன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தகவல் அளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தபோதிலும், உட்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து அரசாங்கம் பொதுமக்களை தொடர்ந்தும் இருட்டில் வைத்திருப்பதை இது தெளிவுபடுத்துகிறது. மேலும் 2023 ஆம் ஆண்டில், 2019 - 2022 க்கு இடையில் இலங்கை அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட 60 திட்டங்களின் 25% ஆன தகவல்கள் மட்டுமே ஒன்லைனில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளன, கண்காணிக்கப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு ரூபா 2.54 ட்ரில்லியனாகும்.
இத்தகவல்கள் ஆங்கிலத்தில் இலகுவாக கிடைக்கப்பெறுவதாகவும், சாத்தியமானால் மட்டுமே சிங்களம் மற்றும் தமிழ் பயன்படுத்தப்பட்டதாகவும் எமது கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, 2022 இல் 18% தகவல்கள் ஆங்கிலத்தில் இருந்தபோது, 5% மட்டுமே சிங்களத்திலும் 4% தமிழிலும் வெளியிடப்பட்டன. 2023 இல் இந்த போக்கு தொடர்ந்தது, அங்கு 25% தகவல்கள் ஆங்கிலத்தில் கிடைக்கின்ற அதே நேரத்தில் 8% தகவல்கள் மாத்திரமே சிங்களத்திலும் தமிழிலும் கிடைக்கின்றன.