NPPயின் 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, அஞ்சல் சேவைகள், மின்சாரம் மற்றும் வலுச்சக்தி, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான பல புதிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தகைய உட்கட்டமைப்பு தொடர்பான வாக்குறுதிகளின் முழுமையான பட்டியல் இதோ...
- (கிராமப்புற வீடுகளில்) வீட்டுக் கட்டுமானங்களை ஆதரிப்பதற்காக வீட்டுக் கடன் திட்டங்களை நிறுவுதல்.
- இலங்கை முழுவதும் பயணிக்கும் கப்பல்களுக்கான குழு உறுப்பினர்களை மாற்றும் மையத்தை நிறுவுதல்.
- இயற்கை பேரழிவுகள் தொடர்பான அபாய எச்சரிக்கையை உடனுக்குடன் மற்றும் செயலூக்கமான முறையில் வழங்கக்கூடிய எச்சரிக்கை அமைப்புக்களை உருவாக்குதல் (உதாரணமாக வெள்ளம், காட்டுத்தீ மற்றும் நிலச்சரிவுகள் போன்றவை).
- புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி (நீர் மின்சாரம், சூரிய சக்தி மற்றும் காற்று) பற்றிய ஆராய்ச்சியை விரிவுபடுத்துதல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் நுகர்வு மீதான சார்புநிலையை குறைத்து புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி சார் இலக்குகளை அடைவதற்கு அக்வெரல காற்றாலை திட்டத்திற்கு முன்னுரிமையளித்தல்.
- உள்நாட்டு மற்றும் தேசிய தேவைகளுக்கான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் பொருட்டு உள்நாட்டு கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் "தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்களை" நிறுவுதல்.
- உள்நாட்டுக் கேள்வியை பூர்த்தி செய்யும் வகையில் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயமாக்குதல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் தொடர்புடைய பொருட்களுக்கான வெளிநாட்டு சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கைப்பற்றுதல்.
- தற்போதுள்ள எண்ணெய் முனையங்களை புதுப்பித்தலைத் தொடர்ந்து திருகோணமலையில் ஒரு சர்வதேச எண்ணெய் பரிமாற்றம் மற்றும் சரக்கு சேமிப்பு
- ஆசிய பிராந்தியத்தின் விமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு விமான சேவை மற்றும் பராமரிப்பு மையத்தை நிறுவுதல்.
- சூரிய சக்தியைப் பயன்படுத்தி, படிப்படியாக 2,000 மெகாவாட் மின்சாரத்தை தேசிய வழங்களில் இணைத்தல்.
- கூட்டுறவுக் கொள்கைகளின் அடிப்படையில் மைக்ரோ-கிரிட் வலையமைப்புக்களை வலுச்சக்தி அலகுகளாக நிறுவுதல்.
- கட்டுமானத்தில் உள்ள 1,500 மெகாவாட் அளவுகொண்ட வெப்ப மின் நிலையங்களை திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களாக மாற்றுதல்.
- இலாபகரமான வலுச்சக்தி துறையில் மறு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் மின்சார நுகர்வோருக்கு இழப்பு ஏற்படாமல் இருப்பதற்கும் சிறிய அளவிலான நீர்மின் நிலைய ஒப்பந்தங்களை புதுப்பித்தல்.
- மின்சார வாகனங்களை மின்னூட்டுவதற்கு (charge) தீவு முழுவதும் கொள்கலன் (battery) மின்னூட்டல் மையங்களின் வலையமைப்பை நிறுவுதல்
- உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் வணிக தரவுகளின் அடிப்படையில் வலுச்சக்தி தொடர்பான முதலீடுகள், வலுச்சக்தி வர்த்தகம், வலுச்சக்தியின் எதிர்கால போக்குகள் போன்றவற்றில் ஆலோசனை வழங்குவதற்கான ஒரு சிறப்பு பணியகத்தை நிறுவுதல்.
- தற்போது புகையிரத வலையமைப்பிற்கு உட்படாத பகுதிகளை உள்ளடக்கும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் ரயில் பாதைகளை படிப்படியாக விரிவுபடுத்துவதனூடாக அனைத்து முக்கிய நகரங்களுக்கும் ரயில் அணுகலை வழங்குதல்.
- மின்சாரத்தில் இயங்கும் வகையிலான ரயில் அமைப்பை படிப்படியாக மேம்படுத்துதல்
- முக்கிய நகரங்களுக்குள்ளும், அருகிலுள்ள பகுதிகளிலிருந்து போக்குவரத்து நெரிசல் உள்ள முக்கிய நகரங்களுக்கும் பாதுகாப்பான சைக்கிள் ஓட்டுதல் பாதைகளை அமைத்தல்
- முக்கிய ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் சைக்கிள் நிறுத்துமிட வசதிகளை வழங்குதல்
- முக்கிய நகரங்களின் சாலை ஓரங்களில் பாதசாரிகளுக்கான பாதைகளை அமைத்தல்
- நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்து ஆராய்ச்சி செய்து ஆலோசனை வழங்குவதற்கான ஒரு தொழில்நுட்ப பிரிவு
- சாத்தியக்கூறு ஆய்வுகள் மூலம் அடையாளம் காணப்பட்ட நீர்வழிகளில் பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து சேவைகளை செயல்படுத்துதல்
- பொது இணையவழி அணுகலுக்கான அலகுகளை அதிகரித்தல்
- கிராமப்புறங்களுக்கான தகவல் தொடர்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்காக, மின்சார சபையின் பரிமாற்ற வலையமைப்புடன் மையப்படுத்தப்பட்ட முக்கிய ஆதார வலையமைப்பை உருவாக்குதல்.
- பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், கல்வி நிறுவனங்கள், தோட்டங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இணைய (wi-fi) வசதியை நிறுவுதல் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளுடனும் IOT-க்கான இலவச அணுகலுடன் நியாயமான விலையில் இணைய அணுகலை வழங்குதல்.
- அவசர சேவைகள், அரச சேவைகள், பொது பாதுகாப்பு சேவைகள், சுகாதார சேவைகள் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான இலவச அணுகல்.
- கிராமப்புறங்கள், குறைந்த செயலெல்லை கொண்ட பகுதிகள் மற்றும் பொது இடங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
- ஒவ்வொரு அமைச்சிலும் PSBயாக நடைமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு வெகுசன தொடர்பாடலுக்கான ஆண்டுக்குரிய பாதீட்டை ஒதுக்குதல்.
- நிலப் பதிவு மற்றும் நில அறிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான மின்னணு அமைப்பு.
- புதிய தொழில்நுட்பம் மற்றும் விலை குறைந்த மூலப்பொருட்களை அறிமுகப்படுத்துவதற்கு கட்டுமானத் துறைக்கான ஒரு சிறப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலகு.