2022 ஆம் ஆண்டில் இலங்கையின் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.5 சதவீதத்தை மட்டுமே முதன்மை, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலைக் கல்விக்காக ஒதுக்கியுள்ளன. இது தெற்காசியாவில் கல்விச் செலவுக்கான பட்டியலில் இலங்கையை கடைசி இடத்தில் தள்ளியுள்ளது. இதற்கு மாறாக இந்தியா, மாலைத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்தை பொதுக் கல்வியில் முதலீடு செய்கின்ற அதேவேளை, பூட்டான் 8 சதவீதத்தை ஒதுக்கி முன்னிலையில் உள்ளது. கடந்த 15 வருடங்களாக இலங்கையின் கல்விக்கான பாதீடு 1.5 - 2 சதவீதத்திற்கு இடையில் உள்ள அதேநேரம், ஏனைய பெரும்பாலான தெற்காசிய நாடுகள் தமது செலவினத்தைச் சீராக அதிகரித்துள்ளன.
ஒப்பீட்டளவில் வலுவான கல்விப் பிரதிபலன்கள் இலங்கையில் உள்ளபோதிலும், குறிப்பாக கல்வித் தரத்தை உயர்த்துதல் மற்றும் உயர்கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துதல் போன்ற விடயங்களில் முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கு இடமுள்ளது. கல்வியில் முதலீடு செய்வது மனித மூலதனத்தைக் கட்டியெழுப்புவதற்கு அத்தியாவசியமாக உள்ளதுடன், இது உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுகின்றது. மேலும் இன்று நாடு எதிர்கொள்ளும் பல சமூக சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு வலுவான கல்வி முறைமை மிகவும் அவசியமாகும்.
மட்டுப்படுத்தப்பட்ட அரச வருமானம் மற்றும் செலவினக் கட்டுப்பாடுகள் காரணமாக, அரசாங்கம் ஏனைய துறைகளுக்கான நிதியைக் குறைத்து கல்விக்கான பாதீட்டை அதிகரிப்பதற்கான தேவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியேற்படலாம். ஒவ்வொரு துறைகளுக்குமான 2024 வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகளை நீங்கள் இங்கே பார்க்கலாம். இலங்கையில் கல்வியை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் எந்தெந்தத் துறைகளுக்கான செலவினத்தைக் குறைக்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கருத்துக்கள் பகுதியில் பதிவிட்டு எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
குறிப்பு:
இலங்கைக்கான புள்ளிவிபரங்கள் மத்திய வங்கியின் செயல்பாட்டு வகைப்பாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபை ஆகிய இரண்டினதும் கல்விக்கான செலவினங்கள் உள்ளடங்குகின்றன. ஏனைய நாடுகளுக்கு, கல்விக்கான மத்திய மற்றும் பிராந்திய அரசாங்கங்களின் செலவினங்களைக் கணக்கில் கொண்டு, அரச செலவினங்கள் குறித்த உலக வங்கியின் தரவு பயன்படுத்தப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில், கல்விச் செலவினங்கள் குறித்த தரவுகள் சில ஆண்டுகளுக்குப் பதிவாகவில்லை. இதில் ஆப்கானிஸ்தான் (2017 முதல்), இந்தியா (2022), பூட்டான் (2012), பங்களாதேஷ் (2010), பாகிஸ்தான் (2022) மற்றும் இலங்கை (2020) ஆகியவை அடங்கும். இந்த ஆண்டுகளில் கல்விச் செலவினம் இறுதியாக அறிக்கையிடப்பட்ட பெறுமதிகளில் இருந்து மாறாமல் இருந்ததாகக் கருதப்படுகின்றது.
மூலங்கள்-
உலக வங்கி. "கல்விக்கான அரசாங்கத்தின் செலவினம், மொத்தம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக)" https://data.worldbank.org/indicator/SE.XPD.TOTL.GD.ZS?end=2014&locations=BT-AF-LK-IN-MV-NP-PK-BD&start=1971 என்னும் இணைப்பிலிருந்து பெறப்பட்டது. [இறுதியாக அணுகியது 10 அக்டோபர் 2024].
இலங்கை மத்திய வங்கி. "ஆண்டறிக்கைகள்." https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports என்னும் இணைப்பிலிருந்து பெறப்பட்டது. [இறுதியாக அணுகியது 10 அக்டோபர் 2024]