2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவு, உட்கட்டமைப்புக் கருத்திட்டமொன்றுக்குப் பொறுப்பான அமைச்சர், கருத்திட்ட தகவல்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று கட்டாயமாக்குகிறது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிதியளிப்புடன் முறையே அ.டொ. 100,000 மற்றும் ரூ. 500,000 க்கு மேற்பட்ட பெறுமதி கொண்ட கருத்திட்டங்கள் பற்றிய தகவல்கள், திட்டத்தை ஆரம்பிப்பதற்கு குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு முன்னர் செயலூக்கமாக/முன்கூட்டியே வெளிப்படுத்தப்படல் வேண்டும். ஒரு கருத்திட்டம் தொடர்பான தகவல்கள் ஐந்து வகைகளின் கீழ் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். கருத்திட்ட விபரங்கள், நோக்கங்கள் மற்றும் பயனாளிகள், வரவு செலவுத்திட்டம் மற்றும் நிதி விபரங்கள், கருத்திட்ட ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகள், கருத்திட்ட கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவையே அவ்வைந்து வகைகளுமாகும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் செயலூக்கமான /முன்கூட்டிய தகவல் வெளிப்படுத்தளுக்கான தேவை இருந்தபோதிலும், சட்டத்திற்கு அமைய வெளிப்படுத்த வேண்டிய தகவல்களில் 36% மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக PublicFinance.LK இன் உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான் இணையத்தளத்தின் டேஷ்போர்டு வெளிப்படுத்தியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அரசின் செயலூக்கமான /முன்கூட்டிய தகவல் வெளிப்பாடுகள் இன்னும் மோசமான நிலையிலேயே காணப்படுவது கவலையளிக்கிறது.
அரச செலவினங்களில் இடம்பெறும் ஊழல், பெரும்பாலும் பொதுக் கொள்முதல் நடவடிக்கைகளுடன் இணைந்தே இடம்பெறுகிறது. கொள்முதல் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவது 21% எனும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுவதாக டேஷ்போர்டு குறிப்பிடுகிறது. அவ்வாறே கருத்திட்ட ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகள் குறித்த தகவல்களின் வெளிப்பாடு 16% எனும் அபாயகரமான மட்டத்தில் உள்ளது.
வெளிநாட்டு நிதியுதவித் திட்டங்களைப் பொறுத்தவரை, அவை சட்டத்துடன் இணங்குவது பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், வெளிநாட்டு நிதியுதவித் திட்டங்கள் தொடர்பான முக்கிய தகவல்களில் 40% ஐ மட்டுமே அரசாங்கம் வெளியிட்டுள்ளது. வெளிநாட்டுக் கடன் வழங்குநர்கள் தங்கள் திட்டங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியுதவிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு இணங்க அரச நிதியளிப்புடன் இணைப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கு உதவலாம்.
வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவது இலங்கையின் பொதுமக்களுக்கு மாத்திரமல்ல, இக்கருத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள கடன் வழங்குநர்களுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் நன்மை பயக்கும்.
மேலதிக தகவலுக்கு, https://dashboards.publicfinance.lk/infrastructure-watch/ இல் உள்ள ' உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்' ஒன்லைன் டாஷ்போர்டைப் பார்வையிடவும். Infrastructure Watch